PCOS - Polycystic ovary syndrome என்றால் என்ன?
- Oct 26, 2023
- 3 min read
Updated: Nov 2, 2023

Polycystic ovarian syndrom எனப்படுவது தற்காலத்தில் அதாவது இந்த 2023ல் பொதுவாக திருமண வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு அல்லது குழந்தை பிறப்புக்கு தயாரான பத்தில் ஒரு பெண்ணுக்கு அவர்களது உடலின் ஹோர்மோன்கள் சரியான விகிதத்தில் சுரக்காததால் உண்டாகும் ஒரு குறைபாடு ஆகும்.
(Hormonal imbalance) இந்த ஹோர்மோன்களின் சமநிலை தவறுவதால் பெண்களின் உடலில் உள்ள சூலகத்தில் குளறுபடி ஏற்படுகின்றது. எப்படியெனில் பெண்களின் மூளையிலுள்ள வெறும் பட்டாணியளவான pituitary gland கபச்சுரப்பியினால் சுரக்கப்படும் FSH மற்றும் LH என்ற இரு ஹார்மோன்களும் தான் மாதாமாதம் பெண்களின் சூலகத்திலிருந்து சூல் அதாவது கருமுட்டை வெளிப்பட உதவுகின்றன. ஆனால் இந்த பிகாஸ் (PCOS) உள்ள பெண்களுக்கு ஒன்றில் அந்த கருமுட்டை/சூல் (Egg) சரியாய் வளருவதில்லை அல்லது முதிர்ச்சி(Mature) அடைவதில்லை அல்லது அப்படி முதிர்ச்சி அடைந்த கருமுட்டை ஓவுலேஷன் (Ovulation) நாட்களில் வெளியேறுவதில்லை.
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு இந்த பிகாஸ் தான் காரண கர்த்தா. மாதவிடாய் என்பது மாதாமாதம் அதாவது 28 நாட்களுக்கு ஒருமுறை ஒரு பெண்ணுக்கு நிகழ வேண்டிய ஒன்று, ஆனால் இந்த பிகாஸ் உள்ள பெண்களுக்கு நாள் தள்ளிப்போகும். அது ஒரு மாதம், இரண்டு மாதம், 3 மாதம் ஏன் என்னுடைய நண்பி ஒருத்திக்கு 6 மாதங்கள் கூட தள்ளி சென்றிருக்கிறது. இந்த ஒழுங்கற்ற மாதவிடாய் infertility எனப்படும் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல்களை உண்டுபண்ணும். உண்மையாக சொன்னால் இந்த நாட்களில் அதிகளவு மகப்பேற்று மையங்கள் (fertility clinics) உண்டாவதற்கு இந்த பிகாசுக்கும் ஒரு பங்குண்டு.
இப்பொழுதெல்லாம் பார்க்கிற எல்லா இளம்பெண்களுக்கு உதட்டுக்கு மேலே லேசாக பூனை முடி போன்ற உரோமங்கள் அப்பட்டமாக தெரிகின்றன. அதை யாரும் இப்போது ஒரு பொருட்டாக கூட கருதுவதில்லை. முன்பெல்லாம் மீசையிருக்கும் பெண்ணுக்கு திருமணம் ஆவதில் பிரச்னை உண்டு, சினிமாவில் எல்லாம் அப்பட்டமாக கலாய்ப்பர்கள். நான் மிகவும் சிறு வய இருக்கும் போது, ஒரு ஐந்து வயதிருக்கும் என நம்புகிறேன், ஒரு குடும்ப திருமணத்தில் ஏன் அந்த மணப்பெண்ணுக்கு மீசை இருக்கு? என நானே கேட்டிருக்கிறேன். இன்றைக்கு நானே கூட வாரம் ஒரு முறை முகத்திலுள்ள உரோமங்களை நீக்குவதில் மிகவும் கவனமாய் இருக்கிறேன், இது இந்த பிகோஸின் ஒரு அடையாளம்.
யாருக்கு இந்த பிகாஸ் வர வாய்ப்புண்டு?

15 வயதிலிருந்து 44 வயதிற்கு இடைப்பட்ட பெண்களில் 5% தொடக்கம் 10% வீதமான குழந்தை பெரும் வாய்ப்புள்ள பெண்களுக்கு இந்த நீர்கட்டிகள் வர வாய்ப்புண்டு. அநேகமான பெண்கள் அவர்களது பின்னிருபதுகளில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் அதாவது குழந்தை பேற்றுக்கு தயாராகும் போது, அதில் சிக்கல்கள் ஏற்படுகையில் வைத்தியரிடம் செல்லும் போது தான் இந்த பிக்கோசை பற்றி அறிந்து கொள்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக பெண்கள் பூப்படைந்த நாள் முதல்கொண்டே இந்த பிகாஸ் வர வாய்ப்புக்கள் உண்டு. மாத்திரமல்லாமல் எல்லா இனத்தாரான பெண்களையும் பாரபட்சமின்றி பாதிக்கிற பெண்ணுக்கு கிடைத்த பெரிய சாபம் இந்த பிகாஸ். அதிலும் கொஞ்சம் அதிக உடல்வாகுள்ள, பருத்த சரீரம் உடைய பெண்களுக்கும், தலைமுறை தலைமுறையாய் குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தாலும் கூட அந்த ஜீன்களின் மூலம் கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக womens health வெப்சைட் கூறுகின்றது.
#1 இந்த பிகோஸின் அறிகுறிகள் என்ன?
முதலாவதும் முக்கியமானதும் - ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி ( 8ற்கும் குறைவான உதிரப்போக்கு ஒரு வருடத்திற்கு இருக்குமானால் ) அல்லது மாதவிடாய் வருவது இளம் வயதிலேயே தடைபட்டிருத்தல்
முகத்தில் அதிக உரோமம் வளர்தல் - உதட்டின் மேல், நாடி பகுதிகளில் அதாவது ஆண்களுக்கு முகத்தில் உரோமம் வளருவது போல் தடிப்பாக உரோமம் வளர்த்தல், பிகாஸ் உள்ள 70%மான பெண்களுக்கு இப்படியான அதிகப்படி உரோமம் வளருவதாக குறிப்பிடுகிறார்கள்.
அதிக முகப்பரு
அதிக முடியுதிர்வு, தலைமயிர் மெலிதாக மாறுதல் அல்லது அடர்த்தி குறைதல், சில இடங்களில் வழுக்கை தோன்றல்.
உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் எடை குறைப்பதில் சிரமம்.
தோல் நிறம் மாறுதல், கழுத்து , மார்பகங்களுக்கு கீழாய் கருமையாய் நிறம் மாறுதல்.
உன்னி அல்லது காய் போன்ற சிறிய கட்டிகள் அக்குள் பகுதிகளில்,கழுத்தில் தோன்றுதல்.
எதினால் பிகோஸ் வருகின்றது?
உண்மையாக சொன்னால் இதன் அடிப்படை காரணம் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை, ஆனால் நான் ஏற்கெனவே சொன்னது போல ஜெனெடிக்ஸ் ஒரு காரணமாக இருக்கலாம் என சில மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அன்றோஜென் எனப்படும் ''ஆண் ஹோர்மோன்கள்'' பெண்களின் உடலில் அதிகளவில் சுரத்தல் அதாவது எல்லா பெண்களும் சிறிய அளவு இந்த அன்ட்றோஜனை சுரப்பதுண்டு ஆனால் பிகாஸ் உள்ள பெண்கள் அதிக அளவில் சுரக்கிறதினாலே தான் ஆண்களுக்கு ஏற்படுவது போல, வழுக்கை விழுதல் மற்றும் சூலகத்திலிருந்து சூல் வெளியேறுதல் தடைப்படல் ஏற்படுகிறது என வைத்திய நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
இரண்டாவது அதிகப்படியான இன்சுலின் சுரத்தல். இன்சுலின் எனப்படுவது நாங்கள் உண்கின்ற உணவை சக்தியாக மற்றும் ஒரு ஹோர்மோன். இது அதிகம் சுரந்தாலும் பாதிப்பு, குறைவாக சுரந்தாலும் பாதிப்பு. இது நாளடைவில் நீரிழிவு நோய்க்கு நேராகவும் நடத்தி செல்ல வாய்ப்புக்கள் உண்டு.
பிகாஸ் என்பது உங்களை தடைசெய்வதற்கு இடமளிக்காமல், இன்னும் அதிகம் உங்களை மனதளவில் திடப்படுத்தி மேற்கொண்டு காரியங்களை நடத்த உங்களால் முடியும். ஒரு பெண்ணாலே கூடாத காரியம் என்று எதுவும் உண்டா என்ன?
எனக்கு பிகாஸ் இருக்கிறது. நான் கர்ப்பமாக முடியுமா?
நிச்சயமாக. பிகாஸ் என்பது உங்களுக்கு இருக்கிறது என்பதினாலே உங்களால் ஒரு குழந்தையை பிறப்பிக்க முடியாது என்று அர்த்தமல்ல. பிகாஸ் எனப்படுவது இப்போது மிகவும் பொதுவாகி போன ஆனால் குணமாக்க கூடிய ஒரு மருத்துவ நிலை. இது குழந்தை பிறப்பை தாமதப்படுத்தும் ஆனால் சரியான மருத்துவ உதவியை நீங்கள் பெறுகிற பட்சத்தில் குணப்படுத்த கூடிய ஒரு குறைபாடு ஆகும்.
உங்கள் சூலகங்கள் சரியான விதத்தில் செயல்பட வேண்டிய மருந்துகளை மருத்துவர் உங்களுக்கு கொடுக்கும் போது, அதோடு கூட நீங்களும் சில உணவு பழக்கங்கள் மற்றும் சரியான உடற்பயிற்சிகளை செய்கையில் காரியங்கள் கைகூடி வர வாய்ப்புகள் நிச்சயமாக உண்டு.
மாத்திரமல்லாமல் நீங்களும் கூட இப்போது சரளமாய் கடையில் கிடைக்க கூடிய ஓவிலேஷன் கிட்ஸ்ஐ(ovulation kit) வாங்கி அதில் காண்பிக்கும் அதிக வாய்ப்புகள் (most fertile day) உள்ள நேரத்தில் உறவு கொள்வதன் மூலம் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளை அதிகரித்து கொள்ளலாம்.
கடைசியாக
பெண்கள் எத்தனையோ அடிமைத்தளைகளை உடைத்து இன்று பெரும்புகழ் அடைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு இந்த பிகாஸ் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல, அதனால் நீங்கள் ஒருவேளை இந்த பிரச்சனையாலே அவதிப்பட்டு கொண்டிருந்தால், இதை பற்றி கவலைப்படுவதை விட்டு மேற்கொண்டு நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை தடையின்றி செய்கிற பொழுது எல்லாம் இனிதே நிறைவு பெறலாம். மனதின் பலமே நமக்கு பெரிய ஆயுதம், ஆகையால் நம்மை பின்னாலே இழுக்கும் எதுவாக இருப்பினும் அது மனிதனோ, மிருகமா, கணமோ, தூதனோ, வியாதியோ, வறுமையோ எதுவாக இருப்பினும் உடைத்தெறிந்து கொண்டு வெளியே வரும் போராட்ட குணம் நமக்குண்டு என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.
உங்களுக்கு இது பற்றிய வேறு கேள்விகள் இருக்குமாயின் மறக்காமல் எனக்கு தெரியப்படுத்தவும்.
#tamil #tamilwoman #tamilwomen #tamilwomenmentalhealth #tamilwomenhealth #empoweringtamilwomen #encouragingtamilwomen #pcos #pcosintamilwomen



Comments