சிநேகிதியே...
- Oct 20, 2023
- 2 min read
Updated: Oct 26, 2023

நேற்று சமையல் செய்து கொண்டிருக்கும் போது ஏதேச்சையாக யூடியூபில் சிநேகிதியே திரைப்படத்தை பார்க்க நேர்ந்தது.
அநேகமாக 2000ம் ஆண்டின் இடைப்பகுதியில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கலாம், கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழிந்த பின்னும் கூட அதன் நினைவுகள் அப்படியே பசுமையாக இருக்கின்றன.
பள்ளிக்கூடத்தில் நாமே நம்மை வாசுக்களாகவும், ராதிகாக்களாகவும் கற்பனை செய்து கொண்டு ‘கல்லூரி மலரே மலரே கண்ணோடு சோகமா’ என்று பாடித்திரிந்ததும், sports meets ல் நம்முடைய இல்லம் வெற்றிபெற்றால் ‘ ஜெயித்தது நாங்களடி, தோற்றது நீங்களடி பாறைகள் மீது முட்டைகள் விழுந்தால் முட்டைகள் தவிடுபொடி’ என்றும் அதே நம்முடைய இல்லம் இரண்டாவதாக வந்தால் ‘வெற்றிகள் எல்லாமே நிரந்தரம் இல்லையடி, ஐஸ்கிரீம் தலையில் செர்ரி பழ வாழ்க்கை அரைநொடி நிமிஷமடி’ என்றும் பாடிய ஞாபகம்.
ராதை மனதில் பாடலை ஓரு வரிகூட பிசகாமல் இன்றும் கூட பாட முடியும், அத்தனை முறை கேட்டிருக்கிறேன், அநேகமாக அந்த நாட்களில் all time favourite அந்த பாடல்தான் போல, எல்லா girls schoolலிலும் ஒரு முறையாவது அந்த பாடலுக்கு ஆடியிருப்பார்கள்.
90’ஸ் கிட்ஸ் உண்மையில் பாக்கியசாலிகள் தான், ஏனெனில் 2000களில் நட்பை வலியுறுத்தி வந்த திரைப்படங்கள் அதிகம். ஏப்ரல் மாதத்தில், உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, சிநேகிதியே, ஃபைவ் ஸ்டார் என்று வருடத்திற்கு ஒரு படம் எப்படியாவது பள்ளிக்கூட/ கல்லூரிக்கால நட்பை நமக்குள் விதைத்து விட்டு கடந்து போய்விடும். கடைசியாக நண்பன் திரைப்படத்தில் அப்படியொரு ஃபீல் இருந்ததாக ஞாபகம் அதன்பின்னர் இன்றளவும் ஏனோ இத்தகைய கதைக்களத்திற்கு ஒரு வறட்சி.
சிநேகிதியே - பெண்களுக்குள் இருக்கும் நட்பு, போட்டி பொறாமை, பாசம் என்ற உணர்வுகளை காண்பித்தால், ஏப்ரல் மாதத்தில் ஆண் பெண் நட்பில் இருக்கும் கண்ணியத்தையும், ஊடுபா போல் அதனுள் இழையோடும் காதலையும் காண்பித்திருக்கும். இந்த காலத்து boy பெஸ்டீஸ் என்ன boy பெஸ்டீஸ் அத்தனை boy பெஸ்டீஸையும் தூக்கி சாப்பிட்டிருக்கும் அந்தப்படம். அதன் பாதிப்பு தான் என்னவோ காதலை கடந்த கண்ணியமான ஆண் பெண் நட்பு வட்டம் இன்றளவும் 90’ஸ் கிட்ஸின் வாழ்க்கையில் காணப்படுகிறது.
ஒரு கல்லூரியின் கதை திரைப்படத்தை பள்ளிக்கூடத்தில் மூன்று நாள் sleepover ல் பார்த்த நினைவு. படம் முடிந்த பின் அத்தனை பேர் கண்களும் கசிந்திருந்தது இன்னமும் நினைவு இருக்கிறது. அப்படியே நடுச்சாமத்தில் tumbler talking செய்ததும், காற்றடிக்க ஜன்னல்கள் சாத்திக்கொள்ள கதறிக்கொண்டு போர்வை போற்றி ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு கிளுகிளுத்ததும் இன்றளவும் கண்முன்னே நிற்கிறது.
கனாக்கானும் காலங்கள் பார்ப்பதற்காகவே விஜய் டீவி /கேபிள் channel வேண்டும் என்று வீட்டில் சண்டை பிடித்தது எல்லாம் வேற லெவல்.
வன்முறை, சாதி, காதல்?, மசாலா, ப்ளக் காமடி, டார்க் காமடி, ரெட் காமடி,இன்னும் என்னென்னவோ இனோவேஷன் பண்ணி படம் எடுக்கும் இயக்குநர்கள் இந்த ஜோனரில் கூட வருங்காலத்தில் ஒரு படம் எடுக்க முனைந்தால் நன்றாக இருக்கும்.



Comments