மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள் என்ன?
- Oct 21, 2023
- 2 min read
Updated: Oct 26, 2023

PMS - Pre Menstrual Syndrome என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த அறிகுறிகளை பற்றி இந்த பதிவில் நான் உங்களோடு பகிர விரும்புகிறேன். இந்த அறிகுறிகள் உங்களுக்கு மாதாமாதம் வரும் உங்கள் நெருங்கிய தோழியான மாதவிடாய் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னாக வந்து மாதவிடாய் சமீபிக்கிறதை உங்களுக்கு அறிவுறுத்தும்.
எல்லா பெண்களும் இந்த அறிகுறிகளில் ஏதாவது ஒன்றை அல்லது அனைத்தையுமே அனுபவித்திருப்பார்கள், ஆனாலும் ஒவ்வொருவரும் வித்தியாசமான உடல்வாகினை மற்றும் உடல் அமைப்பினை கொண்டவர்களாதலால் அவை ஒரே போன்று இருக்க முடியாது. அதுபோல, ஒரே மாதிரியான அறிகுறிகள் எல்லா மாதமும் நேரிடவும் முடியாது, சில சமயங்களில், சில மாதங்களில், பெண்களில் சுரக்கும் ஹோர்மோன்களின் நிமித்தம் அல்லது மன அழுத்தத்தின் நிமித்தம் அல்லது உணவு மற்றும் உடற்பயிற்சியின் நிமித்தம் இவை மாறுபட வாய்ப்புண்டு.
பொதுவான வழக்காக Mood swings மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். சில நேரம் காரணமின்றி அழுகை வரும், பட்டென்று கோபம் வரும் உடனே அன்பு பொங்கும். எதை பார்த்தாலும் எரிச்சலாகவே இருக்கும் உடனே பசிக்கும். இவ்வாறாக மனம் ஒரு சமநிலையை இழந்து காணப்படலாம்.
வருத்தமாக உணர்தல் , காரணமின்றிய பயம் அல்லது கவலை. சாதாரண விடயத்திற்கு உணர்ச்சிவசப்படுகிறீர்களா அப்போ உங்கள் friend சீக்கிரத்தில் வர போகிறா என்று அர்த்தம்.
அடிக்கடி சோர்வாக உணர்கிறீர்களா? ஒரு சின்ன வேலை செய்தாலும் களைப்பாக இருக்கிறதா? இரவில் உறக்கம் வரவில்லையா? அல்லது ஆழ்ந்த உறக்கத்திற்கு போக முடியவில்லையா?
வயிறு உப்பியிருக்கிறதா? உப்பிசமாக தோன்றுகிறதா? ஒரு காப்பி குடித்தாலும் திட்டு முட்டாக இருக்கிறதா? செரிமான பிரச்சனையா, வயிறு பொருமிக்கொண்டு இருக்கிறதா?
அடிவயிற்றில் வலிக்கிறதா?
மார்பகங்களில் வலி காணப்படுகிறதா?
பசி உணர்வில் மாற்றமா? அல்லது சில உணவுகள் பிடிக்காமல் போகிறதா?
சிலருக்கு இடுப்பு வலி வருவதுண்டு.
சிலருக்கு மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு வருவதுண்டு.
தலைவலி விட்டு விட்டு வருவதுமுண்டு.
சிலருக்கு மாதவிடாய் வர முன்னர் முகப்பரு வருவதுண்டு.
சிலருக்கு அதிகம் பசிக்கும்.
சிலருக்கு கை கால்களில் உளைச்சல் ஏற்ப்படும்.
உடலுறவில் ஈடுபாடின்மை.
இந்த அறிகுறிகள் மாதவிடாய் வருவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக வந்து உங்களுக்கு அறிவுறுத்தும்.
90% வீதமான பெண்கள் இந்த அறிகுறிகளை அல்லது இதில் எதாவது ஒன்றிரண்டை அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சிலர் இந்த அறிகுறிகள் கடுமையாக இருப்பதன் நிமித்தம் அன்றாட வேலைகளை கூட செய்வதில் கஷ்டப்படுகிறார்கள்.
ஆனால் அதிர்ஷ்டசாலிகளான சில பெண்களோ இந்த உபாதைகளினால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.

சரீரப்பிரகாரமான மற்றும் மனதளவிலும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் இந்த உபாதைகள் உங்களுக்கு அதிகமாக இருக்குமானால் மருத்துவரை நீங்கள் அணுகுவது நல்லது.
மாதவிடாய் வந்து போன உடனே ஹோர்மோன்கள் சகஜ நிலைக்கு திரும்புவதால் இந்த அறிகுறிகள் எல்லாம் மறைந்து மறுபடியும் சாதாரண நிலைக்கு உங்கள் உடல் திரும்பிவிடும்.
இந்த உபாதைகளை குறைக்க நாம் என்ன செய்யலாம்?
1. சரீரத்தை Activeவாக வைத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள்.
2. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை கடை பிடியுங்கள். 3 வேளை அதிக அளவில் சாப்பிடுவதை காட்டிலும், சிறிய அளவில் அடிக்கடி 2-3 மணி நேர இடைவெளியில் எடுத்து கொள்ளுங்கள்.
3. நல்ல ஆழ்ந்த 7-8 மணி நேர உறக்கம் மிகவும் அவசியமானது.
4. அவசியமானால் வலி நிவாரணிகளை (Ibuprofen/Paracetamol) மருத்துவ ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட அளவில் எடுக்கலாம்.
5. புகைபிடித்தல் மற்றும் மதுபானத்தை தவிர்த்தல் அவசியம்.
Reference list
NHS (2019). PMS (premenstrual syndrome). [online] NHS. Available at: https://www.nhs.uk/conditions/pre-menstrual-syndrome/.
OASH (2018). PMS relief. [online] womenshealth.gov. Available at: https://www.womenshealth.gov/menstrual-cycle/premenstrual-syndrome.



Comments